தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மாறுபட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன், 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முடிவுகளைத் தெரிவிப்பதால், மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒருவித குழப்பமான சூழல் நிலவுகிறது.
திமுக மற்றும் அதிமுகவிற்குச் சாதகமான கணிப்புகள்
வெளியான முடிவுகளில், என்.டி.டி.வி., சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ், மின்னம்பலம் உள்ளிட்ட 7 முன்னணி நிறுவனங்கள் ஆளும் திமுகவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. இந்த முடிவுகளால் திமுக நிர்வாகிகள் "வெற்றி நமதே" என்ற உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரத்தில், டைம்ஸ் நவ் மற்றும் சி.என்.என். நியூஸ் 18 உள்ளிட்ட 3 நிறுவனங்கள் அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்துள்ளன.
தவெக-வின் எழுச்சியும் எதிர்பார்ப்பும்
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய திருப்பமாக, இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், புதிய வரவான தமிழக வெற்றிக் கழகமே (தவெக) ஆட்சியைப் பிடிக்கும் என்று அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தவெக-விற்கு அதிக வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த கணிப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு கட்சிகளை முன்னிலைப்படுத்துவதால், எந்த நிறுவனத்தின் கணிப்பு துல்லியமானது என்பது மே 4-ஆம் தேதி முடிவுகள் வெளியான பிறகே தெரியவரும்.