தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைப் பின்பற்றித் தமிழக அரசுப் பேருந்துகளின் பயணச்சீட்டுகளின் (டிக்கெட்) பின்புறம் தனியார் விளம்பரங்களை அச்சிட்டு வருவாயைப் பெருக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள அரசு, தங்களது மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் நிதியிழப்பைச் சமாளிக்கப் பேருந்து டிக்கெட்டுகளில் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் நோக்கில், 2,000 புதிய குளிர்சாதன (AC) பேருந்துகளை உடனடியாக வாங்குமாறு சமீபத்தில் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இந்தப் புதிய குளிர்சாதனப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தாலும், எக்காரணம் கொண்டும் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார்.
எனவே, பொதுமக்கள் மீது கூடுதல் கட்டணச் சுமையை ஏற்றாமல், பேருந்து டிக்கெட்டுகள் மற்றும் பேருந்துகளின் வெளிப்பகுதிகளில் விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலம் போக்குவரத்துத் துறையின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.