சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் ஈரான் போர் பதற்றம் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் சவரன் 1 லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, வாரத்தின் தொடக்கமான இன்று மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.14,320-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை மேலும் அதிகரித்துள்ளது நகை வாங்குவோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றித் தொடர்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 வரை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதால், வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.