கோவை, நீலகிரி உள்பட 3 மாவட்டங்களில் இன்று (ஜூலை 3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, நேற்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா-மேற்கு வங்க கடலோர பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
கனமழை எச்சரிக்கை
இதன்காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.