தமிழ்நாடு

போக்குவரத்து துறையில் வேலை என மோசடி.. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!

By Christon
29 Jun 2026, 10:57 AM
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசனை, அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் அணுகியுள்ளார். தனக்கு அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி, சீனிவாசனின் மகனுக்குப் போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளர் (AE) வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.

இதனை நம்பி கடந்த 2023 முதல் 2025 வரை பல்வேறு தவணைகளாக ரூ.23 லட்சம் பணத்தை இளஞ்செழியனிடம் சீனிவாசன் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதால், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இளஞ்செழியன் அண்மையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

"கைதான இளஞ்செழியன் எனது உதவியாளர் கிடையாது" என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள எப்.ஐ.ஆரில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த எப்.ஐ.ஆரில், "பாதிக்கப்பட்ட சீனிவாசன் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமைச்சர் சிவசங்கரை நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, 'நீங்கள் கொடுத்த பணம் வந்து சேர்ந்துவிட்டது' என்று கூறி அமைச்சர் தமக்கு வேலைக்கான வாக்குறுதி அளித்ததாகவும், பலமுறை செல்போன் மூலமும் பேசி நம்பிக்கை ஏற்படுத்தியதாகவும்" அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பதிவாகியுள்ளன.

மேலும், முன்னாள் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோருடன் தனது தாய்க்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறியே இளஞ்செழியன் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல லட்சம் மோசடி செய்துள்ளார் என்பதும் எப்.ஐ.ஆர் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, முன்னாள் அமைச்சர் சிவசங்கரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.