தமிழ்நாடு

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு

By Jayakumar
02 Jun 2025, 07:54 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
பாலியல் வன்கொடுமை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்தார்.பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் IPS அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு

இந்த வழக்கில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை ஜுன் 2 ஆம் தேதி வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் அறிவித்தார். அதன்படி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று வெளியாகிறது.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றவாளி ஞானசேகரன் சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளார்.

தண்டனை விவரங்கள் அறிவிப்பு

ஞானசேகரனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக வழக்கு விசாரணையின் போது, ஞானசேகரன், “என் அப்பா இறந்துவிட்டார். நிறைய கடன் உள்ளது, அம்மவையும், சகோதரியையும், மகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். என் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.