தமிழ்நாடு

TN Weather: கோவை, திருப்பூர் உள்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
25 May 2026, 05:09 PM
தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை கோவை, திருப்பூர் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

கனமழை எச்சரிக்கை

இதன்காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (மே 26) கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 27 முதல் மே 29 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.