நீலகிரி, கோவை, சென்னை செங்கல்பட்டு உள்பட 21 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) தெலங்கானாவிலிருந்து கர்நாடக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் வரை நிலவுகிறது.
கனமழை எச்சரிக்கை
இதன்காரணமாக, இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஜூலை 10): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.