தமிழ்நாடு

தவெக அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுநர் மாளிகையில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

By Christon
21 May 2026, 10:57 AM
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 அமைச்சர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி நடைபெற்ற இந்த விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அண்மையில் ஆட்சி அமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டும் முதற்கட்டமாகப் பதவியேற்றிருந்தனர். இந்நிலையில், இன்று (மே 21) காலை 10:00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மேலும் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்லேக்கர் புதிய அமைச்சர்களுக்குப் பதவியேற்புப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் தமிழகத்தில் பல கட்சி பங்களிப்புடன் கூடிய கூட்டாட்சி முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் இடம் பிடித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். தூத்துக்குடி தொகுதியில் வென்ற முதலமைச்சர் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சரவைப் பட்டியலில் பெண் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜயலட்சுமி (குமாரபாளையம்), கமலி (அவிநாசி), ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) மற்றும் கீர்த்தனா (சிவகாசி) ஆகிய 4 பெண் எம்.எல்.ஏ-க்கள் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். அதேபோல் 7 பட்டியல் சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 50% பேர் அமைச்சரவையில் இடம்பற்றுள்ளனர்.