தமிழ்நாடு

இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் தவெக சாதனை!

By Christon
04 May 2026, 05:21 PM
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிக வலுவான முன்னிலையைப் பெற்று வந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே தவெக அதிரடி காட்டியது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி விவரங்கள்

பெரம்பூர் தொகுதியில் விஜய் 1,00,582 வாக்குகளைப் பெற்று, 44,583 வாக்குகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியிலும் 82,885 வாக்குகளைக் குவித்த அவர், 26,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இந்த இரட்டை வெற்றி தவெக தொண்டர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அளவிலான தவெக-வின் நிலை

மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 234 இடங்களில் தவெக 101 இடங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளைத் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றும் நிலையில் உள்ளது ஆளும் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.