கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று (ஜூன் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரம் வரை வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
கனமழை எச்சரிக்கை
இதன்காரணமாக, இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஜூலை 1) கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.