உலகம்

பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்.. 1000 ஆண்டுகள் பழமையான பரம்பானன் கோயிலில் வழிபாடு!

By Christon
08 Jul 2026, 11:58 AM
இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராம்பனன் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராம்பனன் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான பிராம்பனன் கோயிலுக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் பிரதமர் மோடி சென்றார். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்காக 240 சன்னதிகளுடன், 40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாசார பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டதாகும்.

இக்கோவிலின் பராமரிப்புப் பணிகளில் இந்திய தொல்லியல் துறை முக்கியப் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் அழகிய கோபுர அமைப்புகளை அதிபருடன் ஹெலிகாப்டரில் இருந்தபடி ரசித்த பிரதமர் மோடி, பின்னர் சன்னதிக்குள் சென்று சுவாமிகளுக்குத் தீபாராதனை காண்பித்து முறைப்படி வழிபாடு நடத்தினார்.

முன்னதாக, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இருநாட்டு உறவுகள் குறித்துப் பிரதமர் மோடி ஆலோசனைகளை மேற்கொண்டார். அப்போது, இந்தியாவிடம் இருந்து 'பிரம்மோஸ்' மற்றும் 'அஸ்ட்ரா' வான்வழி ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு வழங்குவதற்கான முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவை மேம்படுத்தியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' விருதை அதிபர் பிரபோவோ சுபியான்டோ வழங்கி கௌரவித்தார்.