ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றப் பரிந்துரைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் சமூக வலைதள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால், சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. மேலும், அந்தப் பாதையைக் கடக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ‘டிரம்ப் ஜலசந்தி’ என மாற்றியமைக்கப்பட்ட வரைபடம் ஒன்றைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார். டிரம்பின் இந்தப் பதிவு இணையத்தில் பல்வேறு கேலியான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஒரு குறுகிய கடல் வழியாகும். தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள ‘ஹார்முஸ்’ என்ற பெயர், 13 முதல் 16-ஆம் நூற்றாண்டுகளில் அந்தப் பகுதியில் செல்வாக்குடன் விளங்கிய பண்டைய துறைமுக நகரமான ஹார்முஸிலிருந்து உருவானதாகும். சட்டவிரோதக் கட்டண வசூல் மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக இந்த வழித்தடத்தில் தற்போது இயல்பான கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.