உலகம்

24x7 உழைக்கும் மோடி! - டிரம்ப் பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

By Sumalekha
30 Jun 2026, 06:23 PM
பிரதமர் நரேந்திர மோடியின் பணிப்பழக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த சுவாரஸ்யமான கருத்தை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கா - இந்தியா உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசிய செர்ஜியோ கோர், டிரம்புடன் நடந்த உரையாடலை நினைவுகூர்ந்தார்.

அப்போது அவர், "சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு மியாமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்புடன் கலந்துகொண்டேன். அப்போது அவர், 'பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்போதே அழையுங்கள்' என்று என்னிடம் கூறினார். அதற்கு நான், 'இந்தியாவில் தற்போது காலை 6 மணி' என்று தெரிவித்தேன்" என்றார்.

அதற்கு டிரம்ப் சிரித்தபடி, "பரவாயில்லை... மோடி தூங்கிக்கொண்டிருக்க மாட்டார். என்னைப் போலவே அதிகாலையில் எழுந்துவிடுவார்" என்று கூறியதாக செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவு குறித்து பேசிய அவர், "செயற்கை நுண்ணறிவு (AI), தொழில்நுட்பம், விமானத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியா - அமெரிக்கா இடையேயான மூலோபாய கூட்டாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.