சனிபகவான். இந்தப் + பெயரைக் கேட்டதும் பக்தி வருகிறதோ இல்லையோ, உடனடியாக பயம் வந்துவிடும். ஆனால் உண்மையில் சனிபகவான் தர்மத்தின் காவலர். அதோடு, ஸ்தோத்திரப் பிரியரும் கூட நல்லதை போதிக்கும் நாயகரான சனிபகவானுக்கு தனிக்கோயில் வெகுவெகு அபூர்வம். அதிலும் அவர் மேற்குப் பார்த்த நிலையில் தனித்து நிற்கும் கோலத்தில் அருள்வது மிகமிக அபூர்வம். இவற்றையெல்லாம் விட, ஒரே ஒரு சன்னதிகொண்ட கோயில், அங்கே சுயம்புவாக சனைச்சர பகவான் காட்சிதந்து அருள்வது. அபூர்வத்திலும் அபூர்வம்.
அப்படி ஓர் அபூர்வத் தலம்தான், மதுரை மாவட்டம் சோழவந்தானில் சின்னக் கடைவீதி படித்துறையில் அமைந்துள்ளது. வைகையாற்றங்கரையைப் பார்த்தபடி அமைந்திருக்கும் இக்கோயில், இந்தியாவுக்கு சுதந்தரம் கிடைத்த அதே 1947 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் உள்ள சனிபகவான் சிலை இக்கோயிலுக்கு வருகைபுரிந்த காஞ்சி ஸ்ரீமகாபெரியவா முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பினைக் கொண்டது.
இங்குள்ள மாவலிங்கம் மரமும் வித்தியாசமானது. அது என்னவென்றால், மற்ற மரங்கள் புத்திலை முளைத்தும், பூக்களைச் சிந்தியும் பசுமையாக இருக்கும் காலத்தில் இந்த மரம் மட்டும், பட்ட மரம்போல் காயந்து நிற்கும். அதைத் தொடர்ந்து, பிற மரங்கள் இலை உதிர்த்து நிற்கும் காலகட்டத்தில் இம்மரம் செழித்துப் பூத்துக் குலுங்கி நிற்கும்.
சனீஸ்வர பகவானை தரிசிக்க எண்ணி, இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் பாதங்கள் இத்தலத்தில் பட்டதுமே அவர்களின் பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்பது ஐதிகம். சனிபகவானை தரிசிக்க, பக்தர்கள் படிமேல் ஏறி வருவதால் ஃபடித்துறை சனீஸ்வர பகவான்." என்கிற திருநாமத்துடன் இவர் அழைக்கப் படுகிறார்.
திருநள்ளாறில், தர்பாரண்யேஸ்வராக விளங்கும் சிவனை முதலில் வணங்கிவிட்டு சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்; குச்சனூரில் கருப்பண்ணசாமியை வணங்கிய பின்னர் சனீஸ்வர பகவானைக் கும்பிடுகிறோம் ஆனால் இங்கு, சனைச்சர பகவான் மட்டுமே இருப்பதால், நேரடியாக அவரை மட்டுமே வணங்கலாம்.
சனிபகவானுக்கு உரியவை பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள் என்றாலும் இத்தலத்தில் இவருடைய நட்சத்திரம் விசாகம் எனப்படுகிறது. காரணம் அன்றைய தினமே மூலவர் சனீஸ்வரன் கிடைத்ததாகவும், அபிஷேகம் செய்த பொழுது மயிலாக இருந்தது காகமாக மாறி விட்டது எனவும் சொல்லப்படுகிறது.
எத்தகைய சனி தோஷமும் ஜாதக ரீதியாகவோ அல்லது கோசார அமைப்பினாலோ ஏற்பட்ட வர்கள், இத்தலம் வந்து வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை சனிபகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும் சமயத்தில், ஸ்வர்ண அபிஷேகத்தின்போது, பக்தர்கள் தரும் நாணயங்கள் அதில் பயன் படுத்தப்படுகின்றன.
அபிஷேகம், ஆராதனைகள் முடிந்த பிறகு திருப்பித் தரப்படும் அந்தக் காசினை வங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபடச் சொல்கிறார்கள். இதனால் பணத்தடை நீங்கும் என்று கூறுகின்றனர். சனீஸ்வர பகவானை மனதார நினைத்து நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, எள்ளு விளக்கு ஏற்றி வேண்டிக் கொண்டால் எண்ணியவை யாவும் ஈடேறும் என்பது நம்பிக்கை.
சனிக்கிழமை தோறும் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரையிலான இராகு கால நேரத்தில் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால், சகலவிதமான சனிதோஷங்களும் நீங்கும்; தடைபட்ட சுபகாரியம் கைகூடிவரும் என்கின்றனர். விசாக நட்சத்திர நாளில் இவர் கிடைத்ததாகக் கருதப்படுவதால், ஒவ்வொரு மாதமும் விசாகம் 5 நட்சத்திர நாளன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள், அன்னதானம் நடைபெறுகின்றன. இதில் குறிப்பாக விசாக நட்சத்திரக் காரர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள்.
சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரத்தில் இங்கே வந்து சனீஸ்வரன் பகவானை நினைத்து கையில் அகல்விளக்கு வைத்துக் கொண்டு ஒன்பது முறை சுற்றி வந்தால், உடல்நலம் பெறும், மனம்போல வாழ்க்கை அமையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். சனி என்கிற பெயரைக் சேட்டாலே அஞ்சுவதோ, அல்லது அவரது பிடியில் சிக்கினால் அவ்வளவுதான் என எண்ணுவதோ தவிருங்கள். இயன்றபோது ஒருமுறை இத்தலம் சென்று வணங்குங்கள். சனிபகவான் உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரச் செய்வார்.