சினிமா

AK 64: தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித்குமார்!

By Christon
15 Jul 2026, 12:46 PM
நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் ஷாலினி அஜித்குமார்.
அஜித் குமார் தனது 64-வது திரைப்படமான 'AK64'-ஐ முதன்முறையாகத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 'AK' ஹோம் பேனர் மூலம் தயாரிக்கவுள்ளார். இதுவரை முன்னணி நிறுவனங்களின் படங்களில் மட்டும் நடித்து வந்த அஜித், இந்தத் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகப் புதிய அவதாரம் எடுக்கிறார். இது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ஷாலினி அஜித் குமார் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் தயாரிப்பாளராகக் காலடி எடுத்து வைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் கார்டுகளில் "ஷாலினி அஜித்குமார் வழங்கும்" என்று குறிப்பிடப்பட உள்ளது. படத்தின் நிதி மேலாண்மை, தயாரிப்பு செயல்பாடுகள் மற்றும் படப்பிடிப்பு சார்ந்த ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்புகளை ஷாலினி அஜித் குமார் நேரடியாக மேற்பார்வையிட உள்ளார். ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நிர்வாகப் பொறுப்புகள் மூலம் அவர் மீண்டும் சினிமாவிற்குள் வருவது குறிப்பிடத்தக்கது. ஷாலினி நடிப்பில் கடைசியாக 'பிரியாத வரம் வேண்டும்' என்ற படம் 2001 ஆம் ஆண்டில் வெளியானது. நடிகர் அஜித்குமாருடன் திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்திற்கான லொகேஷன் ஸ்கவுட்டிங் மற்றும் நடிகர்கள் தேர்வு குறித்த ஆரம்பகட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.