நன்றி மறவாத குணம் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. தன்னைத் திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்காக இரண்டு திரைப்படங்கள் நடித்துக் கொடுத்திருந்தார். அதே போன்று, தன்னை மேலும் உயர்த்திவிட்ட ஏணிகளாக இருந்தவர்களுக்கும் உதவி செய்ய நினைத்தார்.
தன்னை அறிமுகப்படுத்திய அபூர்வ ராகங்கள்' படத்தின் தயாரிப்பாளரான 'கலாகேந்திரா' கோவிந்தராஜன், தன்னைத் தனி ஹீரோவாக 'பைரவி' படத்தில் அறிமுகப்படுத்திய கலைஞானம்', 'காளி', 'கர்ஜனை' ஆகிய படங்களில் தன்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர்கள் 'ராம்ஜி, 'பாபுஜி', 'சத்யா ஸ்டுடியோ' நிர்வாகி பத்மநாபன், மூத்த நடிகை பண்டரிபாய், மூத்த நடிகர் வி.கே.ராமசாமி மற்றும் ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான மதுரை நாகராஜராஜா ஆகியோருக்கு உதவி செய்யும் பொருட்டு, நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் 'அருணாச்சலம்.
முதலில் இந்தப் படத்திற்கு 'குபேரன் அண்டு மேஸ்திரி' என்றுதான் தலைப்பு வைத்திருந்தார்கள். அது ரஜினி படத்துக்கான தலைப்பு அல்ல என்ற பலரும் சொன்ன பின்பு, கதையின் நாயகன் 'அருணாச்சலம்' என்ற பெயரே படத்துக்குச் சூட்டப்பட்டது. 1902-ம் ஆண்டு வெளியான "Brewster's Millions என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
அப்பா எழுதி வைத்த உயிலின்படி முப்பது கோடி ரூபாயை ஒரே மாதத்தில் செலவழிக்க வேண்டும். எந்தப் பொருளையும் அவர் சொந்தமாக வாங்கக் கூடாது. யாருக்கும் தானமாகவோ, பரிசாகவோ கொடுக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு ஒரே மாதத்தில் 30 கோடி ரூபாயை முழுவதும் அப்பாவின் சொத்துகள் மகனுக்குக் செலவழித்தால், கிடைக்கும். இதுதான் கதை அப்போது தமிழ்த் திரையுலகில் பல ஹிட்டுக்களைக் கொடுத்திருந்த சுந்தர்.சியை அழைத்து, இந்த வித்தியாசமான கதையைச் சொல்லி, இயக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார், ரஜினி அப்பாவின் உயிலை மகன் எப்படி நிறைவேற்றுகிறார்.
வில்லன்களிடமிருந்து தனது சொத்துகளை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை சுந்தர்.சியின் நேர்த்தியான இயக்கத்தில் படம் சிறப்பாக அமைய, "அருணாச்சலம்' படம் சூப்பர் ஹிட் ஆனது. "ஆண்டவன் சொல்றான், இந்த அருணாச்சலம் செய்யறான்" என்கிற ரஜினியின் பன்ச் டயலாக் பிரபலமாகிவிட்டது.
1997 ஏப்ரல் 10-ம் தேதி வெளியான அருணாச்சலம்' படத்திற்கு அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பின்பு அதே ஏப்ரல் 10-ம் தேதி (1999) ரஜினியின் மெகா சூப்பர் ஹிட் படம் வெளியானது. அது, 'படையப்பா! தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 'அருணாச்சலம் சினி கிரியேஷன்ஸ்' சார்பாக இந்தப் படத்தைத் தானே தயாரித்தார் ரஜினி. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்கிய விதம் ரஜினியை ஆச்சரியப்பட வைத்தது. அந்த அளவுக்கு அவருடைய திரைக்கதையும், இயக்கமும் பக்காவாக இருக்க, ரஜினியின் திரை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது இது தன்னைத் திருமணம் செய்ய மறுத்து, தன் வீட்டு வேலைக் காரியைக் காதலித்துத் திருமணம் செய்த ரஜினி மீது கடுங்கோபத்தில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன், பழிக்குப் பழி வாங்குவதற்காக 25 வருடங்கள் காத்திருந்து, ரஜினியின் குடும்பத்தில் செய்யும் குழப்பம்தான் இந்தப் படத்தின் கதை 'நீலாம்பரி' என்னும் வில்லி கேரக்டரில் அசலாக வாழ்ந்திருந்தார் ரம்யா கிருஷ்ணன், தன்னைத் தேடி வந்த ரஜினியைப் பார்ப்பதற்காக அறைக் கதவை திறந்துகொண்டு மாடிப்படியில் ஸ்டைலாக இறங்கி வருகிற அந்தக் காட்சியும், அதைத் தொடர்ந்து வசனத்தாலேயே ரஜினியுடன் மோதும் காட்சியும் இந்தப் படத்தை ஒரு தூக்குத் தூக்கிவிட்டது.
உட்காருவதற்கு நாற்காலி இல்லாமல் போக, தனது துண்டை எடுத்து வீசி, மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலைக் கீழே இழுத்துவிட்டு, அதில் ஸ்டைலாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, ரம்யாவை ரஜினி கெத்தாகப் பார்க்கின்ற அந்தக் காட்சி, அன்றைய இளைய தலைமுறையின் ஒரு பெரும் பட்டாளத்தை ரஜினி ரசிகர்களாக மாற்றிவிட்டது. "வயசானாலும் அந்த ஸ்டைல் இன்னும் உன்னைவிட்டுப் போகல" என்று வில்லி ரம்யா வியந்து சொல்ல, அது கூடவே பொறந்தது" என்று ரஜினி பதில் சொல்ல... தியேட்டர்கள் விசில் சத்தத்தில் அதிர்ந்தன.
தமிழ்த் திரையுலக வரலாற்றி லேயே முதன்முதலாக மிக அதிகபட்சமாக 210 பிரின்ட்டுகள் போடப்பட்ட படம் இது. அதேபோல் இந்தப் படத்தின் ஆடியோ கேசட்டுகள் ஏழு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது ஒரு சாதனை! இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அத்தனை பாட்டுக்களும் செம ஹிட்!
இந்தப் படம் தமிழக அரசின் ஐந்து விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை ரம்யா கிருஷ்ணனுக்குப் பெற்றுத் தந்தது.