சினிமா

அதிரடி, எமோஷன், 3D பிரமாண்டம்... எப்படி இருக்கு ஸ்பைடர் மேன்?

By Sumalekha
16 Aug 2026, 05:00 PM
அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரமாண்டமான 3D காட்சிகளுடன் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ ரசிகர்களுக்கு சிறந்த திரை விருந்தாக அமைந்துள்ளது.
யா ருக்கும் இல்லாத ஒரு 'சூப்பர் பவர்', நமக்கு இருந்தால் எப்படி இருக்கும்..? இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் 'ஸ்பைடர் மேன்'! திரையில் 'சாகசங்கள்' விரியும்போதெல் லாம், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக் கும் ஒரு புத்துணர்ச்சி தொற்றிக் கொள்கிறது. 'ஸ்பைடர் மேன்' வெற்றிக்கு இதுவே அடித்தளம்.


ஒரு 'நல்ல படம்' எப்படி இருக்கணும்.?


'குடும்பத்தோட பார்க்கணும்... குறிப்பா, சின்னப் பசங்க ரசிக்கணும்..' ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர், 'யுத்தம்... இதுலயும் நல்ல படம் வரலாம். ஆனா... சிறுவருக்குப் பொருந்தி வருமா..? இந்தக் கேள்விக்கு அவசியம் இல்லாமல், நிம்மதியா பார்க்கக்கூடிய படமாக வந்துள்ளது -‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!


பழக்கப்பட்ட டெம்ப்ளேட்தான். ஆனா, முழுக்கவும் 'ஸ்பைடர் மேனாக இல்லாம அப்பப்போ 'பீட்டர் பார்க்கர்' வந்து, எமோஷனல் படமா மாத்திடறாரு. சில சமயங்கள்ல, ஸ்பைடர் மேன் படத்துல, 'இவ்வளவு எமோஷன் தேவையா?ன்னு தோணுது. ஆனாலும் இது பெரிய குறையா தெரியல. முந்தைய படத்து முடிவுல, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வித்தையாலே, 'பார்க்கர்தான் ஸ்பைடர் மேன்' என்கிற உண்மையை மக்கள் மறந்து விடுகிறார்கள். இதனால் அவனது காதலி, நெருங்கிய நண்பன் உட்பட யாருக்குமே பார்க்கரின் உண்மை முகம் தெரியவில்லை. இதற்கிடையில், நியூயார்க் நகரைப் பல அபாயங்கள் சூழ்கின்றன. என்ன செய்யப் போகிறார் 'ஸ்பைடர் மேன்'? இதுதான் கதை!


டாம் ஹாலண்ட் (பார்க்கர்), ஜென்டயா (காதலி MJ), மார்க் ரூஃபலோ (ஹல்க்) உட்பட அத்தனை பேரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ஆரவாரத்தோடு ரசிக்க, நிறைய காட்சிகள். அதுல, 'பெஸ்ட்' நிச்சயமா, ஹல்க்-ஸ்பைடர் மேன் சண்டைக் காட்சி. அட்டகாசமான திரை விருந்து. உண்மை யிலயே தியேட்டர் அதிருது! எப்போதும்போல, நியூயார்க் நகரம் முழுக்கச் சிலந்தி வலையில் ஸ்பைடர் மேன் பறந்து செல்கிற காட்சிட இடையிடையே தலை தூக்கும் மெல்லிய நகைச்சுவை, எதிர்பாராமல் வந்து போகிற பிரதான பாத்திரங்கள், சரியாக ஆரம்பித்து சரியாக முடிகிற சண்டைக் காட்சிகள், அதிரடித் திருப்பங்கள் இல்லாத அழகிய, நீரோட்டமான திரைக்கதை, ரத்தம் இல்லாத, வன்முறையைத் தூண்டாத சண்டைக் காட்சிகள் இதற்குத் தனியே ஒரு சபாஷ்!


நடிகர்கள் வெளிப்படுத்தும் 'க்ளோஸ் அப்' அல்லாத முக பாவனைகள், செவிகளைத் துளைக் காத பாந்தமான இசை, (மைக்கேல் கியாசினோ) இயல்பாகத் தோன்றும் 'கிராஃபிக்ஸ்' புனைவுகள்.. ஆங்கிலப் படங்களுக்கே உரித்தான தொழில்நுட்ப நேர்த்தி... இவற்றோடு 3D' கண்ணாடியில் கண்முன் விரியும் பிரமாண்டம் அனைத்துத் தரப்புப் பார்வையாளருக்கும் மனநிறைவு தருகிறது.
ஏற்கெனவே வெளி வந்த ஸ்பைடர் மேன் ஹோம் சீரிஸ் படங்களின் கதை, பாத்திரங்கள் குறித்த ஒரு சிறிய அறிமுகம் இணைக்கப்பட்டிருந்தால், புதுப் பார்வையாளர்கள் இன்னும் அதிகமாய் ரசித்து இருக்கலாம். ஒருபுறம், அதிசயத் திறன் கொண்ட அரிய வகை மனிதர்கள்.. அவர்களுக்குள்ளேயே உறவு, உதவி, நட்பு, பகை, மோதல், சண்டை மறுபுறம், சாதாரண மனிதர்கள். இங்கிருந்தும் ஓர் அதிசய மனிதன்!


இதைக் களமாய்க் கொண்டு, அட்டகாசம் செய்திருக்கிறார் இயக்குநர் டெசின் டேனியல் க்ரெட்டன். பல இடங்களில் ரசிகர்களின் பலத்த ஆரவாரம், கைத்தட்டலுக்கு இவரே காரணம். திரளாக மக்களைத் தியேட்டருக்கு வரவழைக்கும் யுக்தியில் மீண்டும் ஒருமுறை ஸ்பைடர் மேனுக்கு முழுவெற்றி!


மொத்தத்தில், கண்ணியமான கலகலப்பான படம் என்கிற வகையில், 'ஸ்பைடர் மேன்' வரிசைப் படங்களின் ஈர்ப்பு தொடர்கிறது!