ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த கருப்பு திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி வெளியாகி, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, சூர்யாவின் 46-வது படமான 'விஸ்வநாத் & சன்ஸ் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், சூர்யாவின் 47-வது படத்தை 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'ஜெய் பீம்' படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கே.ஜி.எஃப்', 'காந்தாரா', 'சலார்' உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 'கருப்பு' படத்திற்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், சூர்யாவுடன் இணைகிறார்.
மேலும், நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். 'ஜெய் பீம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சூர்யா - ஞானவேல் கூட்டணி இணைவதால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது.