சினிமா

இவருக்கு இந்த நிலைமையா? 'சுப்ரமணியபுரம்' பட நடிகரின் தற்போதைய நிலை!

By Christon
08 Aug 2026, 12:12 PM
'சுப்ரமணியபுரம்' படத்தில் நடித்த மாரிமுத்து, வாய்ப்புகள் இல்லாததால் ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தைக் கவனித்து வருகிறார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தில் 'டும்கான்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தைப் பெற்றவர் நடிகர் மாரிமுத்து. அப்படத்தில் மைக்செட் கட்டுபவராக நடித்த இவரது கதாபாத்திரம், கதையின் போக்கில் முக்கியப் பங்கு வகித்தது.

மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து 3-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். நிஜ வாழ்க்கையிலும் லைட் மற்றும் மைக்செட் கட்டும் பணிகளைச் செய்து வந்த அவரை, எதேர்ச்சியாக பார்த்த இயக்குநர் சசிகுமார் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.

'சுப்ரமணியபுரம்' படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது குறித்துப் பேசிய மாரிமுத்து, இயக்குநர் சசிகுமார் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாகவும், இருப்பினும் மதுப்பழக்கம் காரணமாகச் சில தவறுகள் நேர்ந்ததால் சசிகுமார் தன் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

திரைப்பட வாய்ப்புகள் இல்லாத சூழலில் வாழ்வாதாரத்திற்காக ரேடியோ கடை வேலை, ஆட்டோ ஓட்டுவது எனக் கிடைக்கும் பணிகளைச் செய்து வந்துள்ளார். திருவிழாக்களுக்கு ரேடியோ செட் கட்டச் சென்ற இடத்தில் கார்த்திகா என்பவரைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார்.

தற்போது பழுதடைந்துள்ள தனது ஆட்டோவைச் சரிசெய்து மீண்டும் அதை இயக்கி வரும் மாரிமுத்துவின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள இவர், கடந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சசிகுமார் 'சுப்ரமணியபுரம் 2' படத்தை எடுத்தால் அதில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாரிமுத்துவுக்கு, திரையுலகினர் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.