ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் 'ஏ' (A) சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து, படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". விஜய்யின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்ட இப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகத் தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியதால் வெளியீடு தள்ளிப்போனது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. இதற்கிடையில் தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஜூலை 9-ஆம் தேதி இப்படத்திற்கு "ஏ" (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவும் முதலமைச்சர் விஜய்யும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், படம் விரைவில் வெளியாகவுள்ளதை அறிவிக்கும் விதமாக 'விரைவில்' (Coming Soon) என்ற வாசகத்துடன், "மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் சி.ஜோசப் விஜய்" (The Honourable Chief Minister Of Tamilnadu C.Joseph Vijay) என்றும் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு பின்பே படம் வெளியாகியிருந்தால் "தளபதி விஜய்" என்று டைட்டில் கார்டு வந்திருக்கும், ஆனால் இப்போது "முதலமைச்சர் விஜய்" என்று குறிப்பிட்டுள்ளது. அதனால் படம் தாமதமாக வந்ததினால் வருத்தமில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.