சினிமா

'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!

By Christon
17 Jun 2026, 10:54 AM
விஜய் - எச் வினோத் கூட்டணியில் உருவான 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் தற்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை நடைமுறைகள் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது படம் முழுமையாகத் தயாராக இருந்தபோதிலும், இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அடுத்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 19 அல்லது ஜூன் 22 ஆகிய தேதிகளில் ஒன்றை ஒட்டி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

தற்போது படக்குழுவினர் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதற்காக டெல்லியில் முகாமிட்டுத் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சினிமா வட்டாரத் தகவல்களின்படி, ஜூன் 19-க்குள் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டால், படம் ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

ஒருவேளை அதிலும் சிறிய தாமதம் ஏற்படும் பட்சத்தில், அதிகபட்சமாக ஜூலை 3-ஆம் தேதிக்குள் படம் நிச்சயம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், இந்த படம் முழுவதுமாக இணையத்தில் லீக் ஆனது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய்யின் திரைப்பயணம் மற்றும் அரசியல் நகர்வுகளை ஒருங்கிணைக்கும் முக்கியப் படமாக இது பார்க்கப்படுவதால், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ஒட்டுமொத்தக் கோலிவுட்டும் காத்துக் கொண்டிருக்கிறது.