அரசியல்

"எடப்பாடி தலைமையிலானது ரியல் அதிமுக இல்ல"– ஆதவ் பரபரப்பு பேச்சு!

By Christon
12 Aug 2026, 07:53 AM
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுகவை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக தவெக ஏற்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுகவை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக தவெக ஏற்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், 2026 - 27-ஆம்ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவை மீதான பொது விவாதமும் தனி தீர்மானங்களும் நடைபெற்று வருகின்றன.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது குறித்து விமர்சித்தார். ஒரு எம்எல்ஏவின் வெற்றிக்காக சுமார் 6,000 கட்சி தொண்டர்கள் உழைப்பதாகவும், தேர்தல் முடிந்த உடனேயே எம்எல்ஏ ஒருவர் கட்சி மாறினால் தொண்டர்களின் உழைப்பு வீணாகிவிடும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, "அவ்வாறு செய்வதை குதிரை பேரம் என்றுதானே சொல்ல முடியும்" என்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, “2017 வரைதான் அம்மாவின் ஆட்சி இருந்தது. அதன்பிறகு இருப்பது உண்மையான அதிமுக இல்லை. அதை நாங்கள் ஏற்கவில்லை” என்று பதிலடி கொடுத்தார்.

மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நீட், ஜிஎஸ்டி, சிஏஏ ஆகியவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும், அவர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் உரிமைகள் டெல்லியிடம் சரணடைக்கப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது நம்பிக்கை இருந்திருந்தால் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். “அதிமுக தொண்டர்கள் உங்கள் தலைமையின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். அதனால்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் தவெகவில் இணைந்துள்ளனர்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

இதனிடையே, மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார், 2017-ம் ஆண்டு நடைபெற்ற கூவத்தூர் சம்பவத்தை சுட்டிக்காட்டினார். அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது கூவத்தூர் சம்பவத்தைப் போன்றது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் சட்டப்பேரவையில் தவெக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.