மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்வதற்காக, வழக்கமான நேரத்தைத் தாண்டி தாமதமாக நடை அடைக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மே 15-ஆம் தேதி தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்தார். வழக்கமாக இக்கோவிலில் மதியம் 12:45 மணிக்கு நடை சாத்தப்படுவது நடைமுறையாகும். ஆனால், அன்று அமைச்சரின் வருகைக்காகக் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தரிசனம் செய்து முடித்த பிறகே நடை அடைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கோவிலின் கருவறைக்குள் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின.
இந்நிலையில், கோவில்களில் நிலவி வரும் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அமைச்சர் சென்றபோது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் அடுத்த வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.