அரசியல்

சொத்து விவரங்கள் மறைப்பு? அதிமுக மாஜி அமைச்சர்கள், வானதி சீனிவாசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

By Christon
17 Apr 2026, 12:41 PM
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குளறுபடிகள் இருப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே தவெக வேட்பாளர் மீது புகார் எழுந்த நிலையில், தற்போது அதிமுகவின் முக்கியப் பிரமுகர்களான ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் மீது அந்தந்த தொகுதி வாக்காளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், வேட்பாளர்கள் தங்களது உண்மையான சொத்து மதிப்பை மறைத்துத் தவறான தகவல்களை வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதச் செயல் என்பதால், இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை (IT) தலையிட்டு விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.