இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நடைமுறை உள்ளது. அப்படிப் போட்டியிடும் வேட்பாளர் இரண்டிலும் வெற்றி பெற்றால், சட்டப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் அந்தத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்குப் பெரும் பணச்செலவு ஏற்படுகிறது. எனவே, இதற்கான தேர்தல் செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரே ஏற்க வேண்டும் என உத்தரவாதப் பத்திரம் பெறத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த மணி என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தின் விளக்கம்
இந்த மனுத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அனுமதி வழங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டினர். மேலும், இந்தச் சட்டப்பிரிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைச் சான்றாகக் காட்டி, தற்போதைய மனுவையும் விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழகத் தேர்தல் சூழல்
சமீபத்தில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்தச் சூழலில் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.