அரசியல்

திமுக - பாஜக கூட்டணி அமைந்தால்.. வானதி சீனிவாசன் கூறியது என்ன?

By Christon
11 Aug 2026, 06:15 PM
திமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், ஐயுஎம்எல், விசிக ஆகிய கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தவெகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாகக் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சும், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக ஆதரவளிக்கும் அல்லது வெளிநடப்பு செய்யும் என்றும் தவெக மற்றும் காங்கிரஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

மேலும், 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை' என திமுக எம்.பி. கனிமொழி சோமு குறிப்பிட்டது, திமுக - பாஜக கூட்டணி தொடர்பான விவாதங்களுக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்தது.

இந்நிலையில், திமுக - பாஜக கூட்டணி அமையுமா என்பது குறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், "அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை" எனக் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "திமுக - பாஜக கூட்டணி அமைந்தால் தெரிவிப்பார்கள்; ஆனால் கூட்டணி உருவாகும் முன்பே நீங்களே அதை உருவாக்கி விடுவீர்கள் போலிருக்கிறது" எனக் கூறிச் சென்றார்.