அரசியல்

கொங்கு மண்டலத்திற்கு ஸ்கெட்ச்.. மாஜிக்களை தட்டித்தூக்கும் அறிவாலயம்!

By Christon
17 Jun 2026, 08:30 AM
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் தி.மு.க-வில் இணையப் போவதாகப் பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க-வில் உட்கட்சி விவாதங்கள் அதிகரித்துள்ள சூழலில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் தி.மு.க-வில் இணையப் போவதாகப் பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமைக்கு எதிராக எழுந்த சில அதிருப்தி குரல்களைத் தொடர்ந்து, கட்சியில் பல்வேறு சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணியும், நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணியும் அண்மைக்காலமாகக் கட்சி நிகழ்வுகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் இருப்பது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் இருவரும் தங்கள் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அ.தி.மு.க-விலிருந்து விலகும் முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய கட்சிகள் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

தி.மு.க-வின் கொங்கு மண்டலக் கணக்கு

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வலுவாக இருக்கும் தி.மு.க, தங்களின் பலம் சற்றே குறைவாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது. கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகள் தேர்தல் அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பதால், அங்குத் தனிப்பட்ட செல்வாக்குக் கொண்ட எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணியைத் தி.மு.க அணுகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர்கள் இணையும் பட்சத்தில், வேலுமணிக்குக் கோவை மண்டலப் பொறுப்பும், தங்கமணிக்கு நாமக்கல் சுற்றுவட்டாரப் பொறுப்பும் வழங்கப்படலாம் என்ற பேச்சும் அரசியல் களத்தில் பலமாக அடிபடுகிறது.

நீடிக்கும் சஸ்பென்ஸ்

அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தின் முன்னணித் தலைவர்கள் குறித்து வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனினும், இந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைமையோ அல்லது எஸ்.பி. வேலுமணி, தங்கமணி தரப்போ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. தற்போதைய சூழலில் அவர்கள் இருவரும் அ.தி.மு.க-விலேயே தொடர்கிறார்களா அல்லது தி.மு.க-வில் இணையும் முடிவை எடுக்கிறார்களா என்பது குறித்து அவர்களின் ஆதரவாளர்களுக்கே இன்னும் தெளிவான தகவல் தெரியவில்லை என்பதால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது.