தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கெனவே இரண்டு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக வெளியாகும் தகவல், உள்ளூர் தி.மு.க வி.ஐ.பி.க்களிடம் மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க. உடன்பிறப்புகள் சிலரிடம் பேசினோம். 'தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக நீண்ட காலம் இருந்தவர் என்.பெரியசாமி. இதற்கிடையே அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார் அனிதா ராதாகிருஷ்ணன். அனிதா, அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர். எனவே, தி.மு.க.விலும் அவர் மாவட்டச் செயலாளராக ஆசைப்பட்டார். அவருக்காக தூத்துக்குடி மாவட்டம் தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்டத்திற்கு அனிதா மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டத்திற்கு என்.பெரியசாமியின் மகள் கீதாஜீவன் செயலாளராக பதவியேற்றார். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது நிர்வாக வசதிக்காகவும், புதியவர்களுக்கு பதவி கொடுக்கவும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டமாக உருவாக்க நினைத்தது கட்சித் தலைமை. ஒரு சில மாவட்டங்களில் அப்படி செய்தும் காட்டினர். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதியை புதிய மாவட்டமாக பிரிக்கலாமா அல்லது தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளை தனியாகப் பிரித்து புதிய மா.செ. நியமிக்கலாமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில்தான் சட்டமன்றத் தேர்தல் வந்தது.
ஆட்சி பறிபோனதை அடுத்து கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்ச தலைமை தீர்மானித்திருக்கிறது. இதையடுத்தே, தூத்துக்குடி மாவட்டத்தில் துடிப்புமிக்க ஒருவரை மாவட்டச் செயலாளராக்கும் நடவடிக்கை விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு அனிதாவும், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு கீதாஜீவனும், விளாத்திகுளம் கோவில்பட்டி தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு மார்க்கண்டேயனும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தாண்டியும் பலர் மாவட்டச் செயலாளராக வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார்கள்.
உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கும் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோயலுக்கு மாவட்டச் செயலாளர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்காக அவர் விளாத்திகுளம், கோவில்பட்டி தவிர்த்து எந்த தொகுதியை உள்ளடக்கிய மாவட் டத்தை கொடுத்தாலும் பொறுப்பேற்க தயாராக இருக்கிறார். உதயநிதியுடன் ஜோயல் நெருக்கமாக இருப்பதால் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கக் கூடாது என்பதில் கனிமொழி உறுதியாக இருக்கிறார். கனிமொழியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு செயலாளராக விரும்புகிறார். தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெயக்கொடியும் கனிமொழி ஆதரவுடன் மாவட்டச் செயலாளராக விரும்புகிறார்.
'கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு நான்தான் மாவட்டச் செயலாளராக வருவேன்' என்று மார்க்கண்டேயன் சொல்லி வருகிறார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகையாவுக்கும் மாவட்டச் செயலாளர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அனிதா மற்றும் கீதாஜீவன் ஆகியோரில் ஒருவரை மா.செ. பதவியில் இருந்து தூக்கிவிட்டு மாநிலப் பொறுப்புக்கு கொண்டுசெல்லவும் தலைமை விரும்புகிறது. ஆனால், நாடார் சமுதாயத்தின் முக்கிய பிரமுகராக அனிதா பார்க்கப்படுவதால் அவரை மாற்றுவதற்கு தலைமை யோசிக்கும். அதேபோல தமிழகத்தில் இருக்கும் ஒரே பெண் மாவட்டச் செயலாளர் எனவே அவரை மாற்றவும் தலைமை யோசிக்கலாம்" என்றார்கள்.
இதற்கு அனிதா என்ன சொல்கிறார்? நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் முடிவாக இருக்கிறது. ஆனால், எந்தெந்த தொகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்கப்படும், யார் புதிய மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்பார்கள் என்பது தெரியவில்லை. கட்சித் தலைமை என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார்” என்றார்.
கீதாஜீவனோ, "அப்படி ஒரு ஐடியா இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கட்சித் தலைமையும் இதுகுறித்து என்னிடம் பேசவில்லை” என்றார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், "தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய குழு வந்தது. அவர்கள் தேர்தல் குறித்து மட்டுமே பேசினார்கள். மாவட்டத்தைப் பிரிப்பது பற்றியோ, மாவட்டச் செயலாளர்கள் நியமிப்பது பற்றியோ பேசவில்லை. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தால் அது கட்சி வளர்ச்சிக்கு உந்துதலாகவே இருக்கும்" என்றார்.
தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெயக்கொடியிடம் கேட்டோம். "தூத்துக்குடி மாவட்டத்தை மூன்றாகப் பிரிப்பது நிச்சயம் நடக்கும். தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளை இணைத்து ஒரு மாவட்டம் உருவாக்கப்படுகிறது. அந்த மாவட்டத்திற்கு நான்கூட மாவட்டச் செயலாளர் ஆகலாம். அப்படி நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறேன்" என்றார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியோ, 'அதிரடி மாற்றங்கள் நடக்கப்போகிறது. ஆனால் யார் மாற்றப்படுவார்கள், யாரை புதிதாக நியமிக்க இருக்கிறார்கள் என்பது தலைவருக்கு மட்டுமே தெரியும். கட்சி என்ன முடிவெடுத்தாலும் அதற்கு தலை வணங்க தயாராக இருக்கிறேன்" என்றார்.
அடுத்த தேர்தல் வரை திமுகவில் இதுபோன்ற பஞ்சாயத்துகள் சகஜம்!