விளையாட்டு

ஆர்சிபியை வீழ்த்தியது ஐதராபாத் .. மைதானத்தில் டிராவிஸ் ஹெட்டைப் புறக்கணித்தாரா விராட் கோலி?

By Christon
23 May 2026, 12:00 PM
விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியின் போது விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயித்த 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடியது. ஆர்சிபி அணியின் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி ஐதராபாத் அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்து கொண்டிருந்த தருணத்தில், மைதானத்தின் நடுவே விராட் கோலிக்கும் டிராவிஸ் ஹெட்டுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

போட்டிக்குப் பிந்தைய சர்ச்சை

மைதானத்தில் ஏற்பட்ட இந்த மோதல் போட்டியுடன் முடிவுக்கு வராமல், ஆட்டம் நிறைவடைந்த பிறகும் எதிரொலித்தது. போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் வழக்கமாகக் கைகுலுக்கிக் கொள்ளும் நடைமுறையின் போது, விராட் கோலி மற்ற ஐதராபாத் வீரர்களுடன் கைகுலுக்கினார். ஆனால், டிராவிஸ் ஹெட் கைகொடுக்க முன்வந்தபோதும், கோலி அவரை முற்றிலும் புறக்கணித்துத் திரும்பிப் பார்க்காமல் கடந்து சென்றார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

உலகத் தரம் வாய்ந்த இரு முன்னணி வீரர்களுக்கு இடையே மைதானத்தில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவமும், விராட் கோலி கைகுலுக்காமல் சென்ற வீடியோ காட்சிகளும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சமூக வலைதளங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.