தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் எஸ்பி.வேலுமணி தலைமையில் ஒரு தவெக ஆதரவு அணி உருவானது. பின்னர் இந்த அணி எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்துகொண்ட போதிலும், வேலுமணி அணியில் இருந்த 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
தொகுதிகள் காலியான பின்னணி
அதிமுகவிலிருந்து விலகிய மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி ஜெயகுமார், தாராபுரம் தொகுதி சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களுடன் சேர்த்து, முதலமைச்சர் விஜயும் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த 5 பேரின் ராஜினாமாவையும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, தமிழகத்தில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் தீவிரம்
சட்டப்படி ஒரு தொகுதி காலியான 6 மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், இதற்கான ஆயத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஜூன் மாத இறுதிக்குள் முதற்கட்டப் பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ளன. அதனைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் இடைத்தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் என டெல்லி தேர்தல் ஆணைய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.