தமிழ்நாடு

ஆண் நண்பருடன் காரில் இருந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காவலர் அதிரடி கைது!

By Christon
01 May 2026, 12:05 PM
சென்னையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்ததுடன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 29-ஆம் தேதி பெசன்ட் நகர் பகுதியில் 21 வயது இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காவலர் உடையில் வந்த நபர் ஒருவர், காருக்குள் தவறு செய்வதாகக் கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பெற்றோரிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் 8,000 ரூபாய் தர வேண்டும் என அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து பணம் எடுப்பதற்காக அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் அருகில் இருந்த ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார்.

பாலியல் அத்துமீறல் மற்றும் மிரட்டல்

ஆண் நண்பர் இல்லாத அந்த நேரத்தில், காரில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அந்த நபர் பாலியல் ரீதியாக அநாகரிகமாகப் பேசியதுடன், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்தினரிடம் தவறாகக் கூறிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். பின்னர், ஏடிஎம்-லிருந்து பணம் எடுத்து வந்த ஆண் நண்பரிடமிருந்து 8,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிசிடிவி மூலம் சிக்கிய காவலர்

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்துத் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க, நேற்று மாலை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அத்துமீறலில் ஈடுபட்டவர் உயர் நீதிமன்ற வளாக காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஜோசப் என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் நெல்லை காவல் ஆணையரகத்தில் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த சாஸ்திரி நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.