சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் ரூ.100 பத்திரத்தில் கட்டாயக் கையெழுத்து வாங்கி, தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று கொத்தடிமை முறையை அரங்கேற்றி வரும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சலுகைகளை மறுக்கும் கட்டாய ஒப்பந்தம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக, துறையூர் பகுதியைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளர், வேலைக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ரூ.100 மதிப்புள்ள பத்திரத்தில் கொத்தடிமைத் தனமான நிபந்தனைகளுடன் கையெழுத்து வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்தப் பத்திரத்தில், பணிக்கு வரும் தொழிலாளர்கள் அரசின் எந்தவொரு சலுகையையும் கோரக் கூடாது என்றும், குறிப்பாக இ.எஸ்.ஐ. (ESI) மற்றும் பி.எஃப். (PF) போன்ற சட்டப்பூர்வப் பலன்களைக் கேட்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சங்கங்கள் மூலம் பணி நிரந்தரம் கோரி எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்றும், மீறிப் போராடினால் நிர்வாகம் எடுக்கும் பணிநீக்க முடிவுக்குக் கட்டுப்பட்டு எவ்வித எதிர்ப்பும் இன்றி விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அதிர்ச்சியூட்டும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு எழுந்த கோரிக்கை
வழக்கமாக தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளைச் சங்கங்கள் மூலம் அரசுக்கு எடுத்துரைத்துத் தீர்வு காணும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், இந்தத் தனியார் நிறுவனம் பழைய கொத்தடிமை முறையை மீண்டும் புகுத்தி வருவதாகத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வறுமை மற்றும் வாழ்வாதாரச் சூழல் காரணமாக வேறு வழியின்றிச் சில பணியாளர்கள் இந்த ரூ.100 பத்திரத்தில் கையெழுத்திட்டு வேலைக்குச் சேரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தி, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தூய்மைப் பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.