திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் தனது வெற்றியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி, தமிழக முதலமைச்சர் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காகத் தனது வெற்றியைச் செல்லாது எனக் அறிவிக்க முடியாது என்று அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாகவே இருந்தாலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அக்காரணத்திற்காகத் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வருகிறதா என்பதை வழக்கு தொடுத்தவர்கள் நிரூபிக்கவில்லை என்றும், நடத்தை விதிமீறல்கள் வெற்றி செல்லாது என்பதற்குரிய காரணியாகாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளை மறைத்ததாகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என மனுவில் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் பணத்தைச் செலவிட்டார்கள் அல்லது எப்போது வழங்கப்பட்டது போன்ற அடிப்படை விவரங்கள் எதுவும் வழக்கில் குறிப்பிடப்படவில்லை என்பதையும், வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படும் புகார்களும் எவ்வித ஆதாரமும் இல்லாதவை என்றும் மனுவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.