தமிழ்நாடு

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

By VASUKI
07 Apr 2025, 01:39 PM
பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27 ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாம்பரம் கவுன்சிலர் ஜெயா பிரதீப் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் தங்கள் பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் தரப்பில், முழுமையான விசாரணை நடத்தாமல் பதவி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அனுப்பிய நோட்டீசுக்கு அளித்த பதிலில், மாநகராட்சி ஆணையர் தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அந்த கருத்துக்கள் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படவில்லை என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விளக்கம் அளித்து கவுன்சிலர்கள் அளித்த பதில் மீது ஆணையர் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை. அந்த பதிலின் அடிப்படையில் அரசு முடிவெடுக்க வேண்டும். கவுன்சிலர்களின் பதிலை ஆணையருக்கு அனுப்பியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

இது சம்பந்தமாக ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விரிவான பதிலை ஆவணங்களுடன் தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தரப்பில், நகராட்சி தலைவர் பதவியில் இருந்தும், கவுன்சிலர் பதவியில் இருந்தும் நீக்கியுள்ளனர். முதலில், நகராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பாக குறிப்பிட்ட அரசு, அந்த உத்தரவில் கவுன்சிலர் பதவியையும் சேர்த்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி தலைவர் எனக் குறிப்பிட்டு விட்டு, கவுன்சிலர் பதவியில் இருந்தும் நீக்குவது குறித்து குறிப்பிட்டது சம்பந்தமாக நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கும் 21ம் தேதிக்குள் பதிலளிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டார்.