தமிழ்நாடு

பூசாரி வீட்டு தொட்டியில் மிதந்த பெண் சடலம்.. சேலத்தில் பரபரப்பு!

By Christon
31 Aug 2026, 12:17 PM
சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
சேலம் அரிசிபாளையம் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் அரிசிபாளையம் குணபால ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் பூசாரி ரமேஷ். இவர் தனது வீட்டின் குழாயைத் திறந்தபோது நீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், மொட்டை மாடிக்குச் சென்று தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.

அப்போது தொட்டிக்குள் மூட்டைகள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பள்ளப்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளப்பட்டி போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தண்ணீர் தொட்டியைச் சோதனையிட்டனர். அதில், பெண் ஒருவரின் உடல் 7 துண்டுகளாக வெட்டப்பட்டு, 3 மூட்டைகளாகக் கட்டி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஒரு மூட்டையில் தலை மற்றும் உடற்பகுதியும், மற்ற மூட்டைகளில் கை மற்றும் கால் பாகங்களும் தனித்தனியாக அடைக்கப்பட்டிருந்தன. காவல் துறையினர் அந்த மூட்டைகளைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளைப் பதிவு செய்ததுடன், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுச் சோதனைகள் நடத்தப்பட்டன. படுகொலை செய்யப்பட்ட பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.