சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர்கள் தரப்பு வாதம்
ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்ஜாமீன் பெற்ற போதிலும் தங்கள் மீது தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், வேறு ஏதேனும் ஒரு வழக்கில் தங்களைக் கைது செய்யக் காவல்துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தங்களுக்கு அச்சம் உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், சட்டப்படியான விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதால், விசாரணை தேவைப்படும் பட்சத்தில் பிஎன்எஸ்எஸ் (BNSS) சட்டப்பிரிவு 35(3)-ன் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும், சோதனை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என்றும் கோரப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், மனுவில் பொத்தம்பொதுவாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும் மனுதாரர்கள் இன்னும் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறவில்லை என்பத சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில தங்களை விசாரணையில் துன்புறுத்தக் கூடாது எனக் கோர முடியாது என்றும், மற்ற வழக்குகளைப் பொறுத்தவரை முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறி இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.