தமிழ்நாடு

குதிரை பேரம் வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு.. தீர்ப்பு ஒத்திவைப்பு!

By Christon
16 Jul 2026, 12:08 PM
குதிரை பேரம் பேசப்பட்டதாகத் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.
தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் பேசப்பட்டதாகத் திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு (CBI) மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ.பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஊத்தங்கரையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குத் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, "ஊத்தங்கரை எம்.எல்.ஏ அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள் சம்பந்தப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சமாகச் செயல்படுகின்றனர்" என வாதிட்டார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த விவகாரத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரினார்.

இதற்குப் பதில் அளித்து வாதிட்ட தமிழக அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "பாதிக்கப்பட்டுப் புகார் அளித்தவர்கள் யாரும் இந்த வழக்கைத் தொடரவில்லை. மாநில போலீசார் இந்த வழக்கில் பலரைக் கைது செய்து, முறையான ஆதாரங்களைத் திரட்டிச் சரியாக விசாரித்து வருவதால், இந்த விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு வழக்கின் விசாரணை நடந்து வரும் சூழலில், மற்ற புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக மட்டுமே இந்த விசாரணையை மாற்ற வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான இறுதித் தீர்ப்பைத் தேதிகுறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.