தமிழ்நாடு

மேகதாது தீர்மானம்: தமிழக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்!

By Sumalekha
08 Jul 2026, 06:00 PM
மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து முடிவு செய்ய மத்திய அரசு புதிய தீர்ப்பாயம் அமைக்கவேண்டும்' என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு காவிரி உரிமை மீட்புக்குழு உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மான நகல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் 'ஜென்-ஸி' தலைமுறையினரை தமிழகத்திற்கு எதிராக கர்நாடக அரசு தூண்டிவிடுவதாகவும் பகீர் புகார்களையும் எழுப்புகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமலநாதனிடம் பேசினோம். “50 ஆண்டுகால காவிரி பிரச்னையில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தொடர்ந்து ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. காவிரி ஆணையமும் இதுவரை 52 கூட்டங்களை நடத்திவிட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும் கர்நாடகா அரசு பின்பற்றவில்லை. மேகதாது என்பது ஏற்கெனவே நம் காவிரி தண்ணீர் வரக்கூடிய பகுதியில் ஏற்படுத்தவிருக்கும் புதிய குறுக்கீடு, புதிய தடை இது தனி திட்டம் இல்லை.

இதற்கு எதற்கு புதிய தீர்ப்பாயம்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே, 'காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானப் பணி மேற்கொண்டாலும் அதன் வடிநில கீழ்ப்பகுதியில் உள்ள மாநில அரசுகளின் ஒப்புதலோடுதான் செய்யவேண்டும்' என்று இருக்கும்போது பிறகு எதற்கு புதிய தீர்ப்பாயம்? 'எல்லாவற்றிற்கும் தீர்ப்பாயம் முடிவெடுக்கும்' என்று சொல்லி இவர்கள் ஒதுங்கிக்கொள்ளவே இந்த ஏற்பாடு.

இத்தனை ஆண்டுளாக காவிரி ஆணையம் கூறிய ஒவ்வொரு மாதாந்திர நீர் பகிர்வு மற்றும் நீர் பங்கீட்டை எப்போதுமே கர்நாடக அரசு மதித்ததே இல்லை. அவர்களின் அணை நிரம்பி அதற்கு ஆபத்து என்றால் மட்டுமே நீரை திறப்பார்கள். மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தீர்ப்பாயம் என்ற புதிய கரடியை விடுகிறார்கள். காவிரி ஆணையத்தின் நடுவர் மன்ற 1991ம் வருட தீர்ப்பில் 205 டி.எம்.சி என அறிவிக்கப்பட்டு அதிலும் குளறுபடி செய்து இறுதி தீர்ப்பில் 177 டி.எம். சியாக குறைக்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன் வரை 360 டி.எம்.சி நீரை பயன்படுத்திவந்தோம். தற்போது செயல்படும் காவிரி ஆணையத்தினால் தமிழகத்திற்கு எள்ளளவும் பயன் இல்லாத நிலையில் புதிய தீர்ப்பாயத்தாலும் எந்த பயனும் இருக்காது" என்றவர் ஜென்ஸி தலைமுறையினர் குறித்த பகீர் தகவலையும் கூறினார்.

கர்நாடகா ஜென்ஸி தலைமுறையினரின் மனதில் மேகதாது குறித்து ஒரு தவறான புரிதலை உண்டாக்கவும், அவர்களின் மனதில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவும் கர்நாடக அரசும் அங்கே உள்ள சில சக்திகளும் முயற்சி மேற்கொண்டிருக்கின்றன. இதனால் 1991ல் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் அங்கேயுள்ள பல்வேறு நதிகள் மூலம் மேற்கு நோக்கி பாய்ந்து வருடத்திற்கு 2,200 டி.எம்சி தண்ணீர் அரபிக்கடலில் கலக்கிறது.

இதிலிருந்து வெறும் 300 டி.எம்.சி தண்ணீரை மட்டும் தெலங்கானாவில் செயல்படுத்தப்பட்டு வரும் 'காலேஸ்வரம் நீர் மேலேற்றுத்திட்டம்' போல் கர்நாடகாவில் நேத்ராவதி, ஹேமாவதி நீர் மேலேற்று மற்றும் மலைக்குடைவு திட்டத்தின் மூலம் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் நீரை தேக்குவதன் மூலம் ஒட்டுமொத்த கர்நாடக நீர் தேவையை சரிசெய்வதோடு, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எவ்வித சீர்குலைவும் ஏற்படாமல் 50 ஆண்டுகால நான்கு மாநில நதிநீர் பிரச்னையையும் தீர்க்க முடியும்.

இதை கர்நாடகத்தைச் சேர்ந்த ஆசிய வங்கியின் நீர்வள ஆலோசகரும், ஓய்வுபெற்ற கர்நாடக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருமான மறைந்த பவானிசங்கர் என்பவர்தான் சொன்னார். இது மாதிரியான விஷயங்களை கர்நாடக ஜென்-ஸி தலைமுறையினருக்கு தெரியாமல் இவர்கள் மறைத்துவருகின்றனர்" என்றார்.

இதற்கிடையே, காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ மணியரசன் தலைமையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அவர், 'முதல்வர் மக்களை சந்திப்பதே இல்லை. அதேபோல் சட்டசபையில் தி.மு.கவை சாடி பேசிய முதல்வர் விஜய், மேகதாதுவைப்பற்றி ஏன் பேசவில்லை? குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கின்றது. இது தவறான தீர்மானம் என்பது அவர்களுக்கே தெரியும்.

இது பெரும் சதியா என்று கூட எங்களுக்கு சந்தேகம் உள்ளது. தேர்தலுக்கு முன்பாக 4.3.2026 அன்றே தி.மு.க அரசு டெல்லி அரசுக்கு மேகதாது விஷயத்தில் நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துவிட்டது என உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அதேபோல் முதல்வர் விஜய்யும் 26.05.2026 அன்று டெல்லியில் நடுவர் மன்றம் அமைப்பது குறித்து பேசிவிட்டேன் என்கிறார். இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து டெல்லியில் யாரோ பேசி முடிவு செய்திருக்கின்றனர்.

இதில் பெரிய கூட்டுச்சதி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம். இந்த தீர்ப்பாய தீர்மானத்தை வாபஸ் பெறும் வரை எங்கள் போரட்டம் தொடரும்" என்றார். இதுகுறித்து தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத்தின் கருத்தை அறிய அவரது செல்போனில் தொடர்புகொண்டோம். இந்த இதழ் அச்சுக்கு செல்லும் நேரம் வரை அவரது தரப்பு விளக்கம் கிடைக்கவில்லை.
தமிழர் ரத்தம் கர்நாடகாவில் சிந்தாமல் பார்த்துக் கொள்ளும் கடமை முதல்வர் விஜய்க்கு இருக்கிறது!