ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் ஈரான் மீது நேற்று தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தாக்குதல்களை அமெரிக்கா தற்போது மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
டிரம்ப் எச்சரிக்கை
ஈரானின் நடவடிக்கைக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்தியத் தாக்குதலுக்கு இதுவொரு வலுவான பதில் நடவடிக்கை என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஈரான் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டிரம்ப் காரசாரமாகத் தெரிவித்திருந்தார்.
ஈரானின் எதிர்வினை
முன்னதாக, பேச்சுவார்த்தைக்காகக் கடந்த வாரம் அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த தாக்குதல் நடவடிக்கைகள், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் மீண்டும் தொடங்கியது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மற்றும் கட்டளை மையத்தைக் குறிவைத்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தியது. இருப்பினும், அந்த ஏவுகணைகள் அனைத்தும் அமெரிக்க இராணுவத்தால் நடுவழியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை தங்களுடைய எதிர்ப்பும் தொடரும் என்றும், மிரட்டல் தொனியில் பேசுவதை அமெரிக்க நிறுத்த வேண்டும் என்றும் ஈரானிய முகமை தெரிவித்துள்ளது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியே உரிய அனுமதியின்றி பயணிக்க முயன்ற மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியதாக ஈரானிய கடற்படைப் பிரிவு தெரிவித்துள்ளது.