சினிமா

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது... டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Sumalekha
01 Jul 2026, 05:24 PM
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், இசை நிறுவனமான சரிகமாவுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் காப்புரிமை வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
'அன்னக்கிளி', '16 வயதினிலே', 'கவிக்குயில்', 'முள்ளும் மலரும்', 'கல்யாணராமன்', 'ராஜ பார்வை', 'நெற்றிக்கண்', 'பல்லவி அனு பல்லவி', 'பாரதி' உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் தொடர்பாக காப்புரிமை உரிமை யாருக்கு என்பது குறித்து சரிகமா நிறுவனம் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோருவதைத் தடுக்க சரிகமா நிறுவனத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சரிகமா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்ய மறுத்துள்ளது. மேலும், இந்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த வழக்கில் இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்வாதி சுகுமார் ஆஜராகி வாதாடினார். அவருடன் வழக்கறிஞர்கள் நவீன் நாகார்ஜுனா, ஷ்லோகா நாராயணன், ரித்விக் ரகுவன்ஷி, ரிஷிகா அகர்வால் மற்றும் அன்ஷு துளசியன் ஆகியோரும் ஆஜராகினர்.

தமிழ் திரையிசை உலகையே உற்றுநோக்க வைத்துள்ள இந்த காப்புரிமை வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இளையராஜா - சரிகமா இடையேயான பல ஆண்டுகளாக நீடித்து வரும் சட்டப் போராட்டத்தில் அடுத்தகட்டமாக என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இசைத்துறை மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.