முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" பல போராட்டங்களுக்கு பின் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்த நிலையில், திரையரங்கில் மிஸ் பண்ண பல ரசிகர்களுக்கு தற்போது படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. எங்கு பார்க்கலாம் என்பதை வாங்க பார்க்கலாம்....
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த முடிவு செய்த விஜய், தனது திரைப்பயணத்திற்கு ‘ஜனநாயகன்’ மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் இப்படம் வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்து மும்முரமாக பணிகள் செய்து வந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் காரணமாக, படம் பொங்கலுக்கு வெளியிடமுடியாமல் போனது. அதுமட்டுமின்றி, தயாரிப்பு நிறுவனம் சார்பில் மத்திய தணிக்கை குழு மீது வழக்குகள் பதியப்பட்டு மாறி மாறி பெரும் பிரச்சனைகள் நிலவி வந்தது.
அதன்பின், தமிழ்நாடு தேர்தல் நேரத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளிவர முடியாத நிலையில், சமூக வலைத்தளத்தில் படம் முழுவதும் கசிந்து விஜய் ரசிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. படத்தின் படத்தொகுப்பு பிரிவில் இருந்து இந்த படம் கசியப்பட்டது என வெளியான படக்காட்சிகளில் எடிட்டர் வாட்டர்மார்க் இருந்ததன் மூலம் தெரியவந்தது.
இறுதியில், ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்பட்ட நிலையில், உலகளவில் ரூ.280 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. என்னதான் படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் கசிந்தாலும் விஜய் ரசிகர்கள் பலரும் கசிந்த படத்தை பார்க்கமாட்டோம் என்று காத்திருந்து திரையரங்கில் பார்த்ததாக சமூக வலைதலைப்பக்கங்களில் தங்களது ரசிக விசுவாசத்தை காண்பித்தார்கள்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை ஆகஸ்ட் 17-ம் தேதி ஜீ5 ஓடிடி தளம் வெளியிட்டது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படத்தை ரசிகர்கள் பார்க்கலாம். இதனை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வீடியோ ஒன்றினை ஜீ5 ஓடிடி தளம் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.
ஜீ5 ஓடிடி தளம் குறிப்பிட்டபடி, இன்று காலையிலேயே ஜனநாயகன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இதில் சிறப்பான விஷயமாக ரசிகர்கள் கருதுவது, தேர்தலுக்கு பின் இந்த படம் வெளியானதால் படத்தின் டைட்டிலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C.ஜோசப் விஜய் என்று திரையரங்கில் வெளியானது. அதுவும் சட்டசபையில் முதலமைச்சர் செய்த செய்கைகளுடன் இந்த டைட்டிலே கார்ட் வந்ததும் திரையரங்கமே ரசிகர்களின் கொண்டாட்டத்தில் அதிர்ந்து போன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதுபோல, ஓடிடி தளத்திலும் முதலமைச்சரின் சட்டசபை செய்கைகளுடன் டைட்டில் கார்ட் திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் கண்டு மகிழலாம். தளபதி விஜய்யின் கடைசி படத்திற்கு ஏற்பட்ட போராட்டங்களுக்கு, இறுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C.ஜோசப் விஜய் -யின் 'ஜனநாயகன்' என்று படத்தை பார்க்கும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் உண்மையிலேயே விருந்தாக அமைந்ததாக ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.