டெல்லியின் ராணி பாக் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு, வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் தனியார் பேருந்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மங்கோல்புரியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் அந்தப் பெண், பிதாம்புரா பகுதியில் வசித்து வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்தது எப்படி?
மே 11-ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட பெண் சரஸ்வதி விஹார் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்ற ஒரு ஸ்லீப்பர் பேருந்தில் இருந்த நபரிடம் நேரம் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் வலுக்கட்டாயமாகப் பேருந்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நங்லோய் பகுதியை நோக்கிப் பேருந்தை ஓட்டிச் சென்ற நிலையில், அங்கு வைத்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
போலீசார் நடவடிக்கை
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு குற்றவாளிகளைக் கைது செய்தனர். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த 'நிர்பயா' பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.