இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை: இரு நாட்டு பிரதமர்களுக்கும் முக்கியப் பிரமுகர்கள் கடிதம்!

By Christon
02 Jul 2026, 08:52 AM
இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 117 முக்கியப் பிரமுகர்கள் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், தூதரக உறவுகளை வலுப்படுத்தவும் கோரி இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'அமைதி மற்றும் வளர்ச்சிக்கான மையம்' (Centre for Peace and Progress) அமைப்பின் தலைவரும், இந்த முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவருமான ஓ.பி.ஷா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "இரு அண்டை நாடுகளுக்கு இடையே தற்போது நிலவும் சூழல் துரதிர்ஷ்டவசமாக சுமுகமாக இல்லை. இது ஒட்டுமொத்த துணைக்கண்டத்தில் வாழும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இடையே அமைதியும், நல்லுறவும் நிலவுவது மிக அவசியமாகும். இரு நாடுகளையும் போரை நோக்கித் தள்ளும் எந்தவொரு சூழலும் வளர்ச்சியை முடக்கிவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் தொடர்புடைய மும்பை தாக்குதல், புல்வாமா மற்றும் பகல்காம் போன்ற தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "எனக்கு எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களின் மீது முழு நம்பிக்கை உள்ளது. பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே பேசித் தீர்க்க வேண்டும். இதற்காகத் தொடர்புகளைத் துண்டிக்கக் கூடாது" என்று ஓ.பி.ஷா பதிலளித்துள்ளார். மேலும், இரு நாடுகளும் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் தாக்குதல்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் குறித்துப் பேசிய அவர், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் பேச்சுவார்த்தை மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும் என்றார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள் என்றும், இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.