இந்தியா

மணிப்பூரின் இளம் ஆட்சியராக தஞ்சை பெண்.. குவியும் பாராட்டுக்கள்!

By Christon
14 Aug 2026, 05:54 PM
மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட ஆட்சியராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா (வயது 28) பொறுப்பேற்றுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட ஆட்சியராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா (வயது 28) பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஏஞ்சலின் ரெனிட்டா, தனது பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியிலேயே பயின்றார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியல் பிரிவில் படித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

சிறுவயது முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த இவர், 2022-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 338-வது இடம் பிடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார்.

மணிப்பூர் கேடருக்குத் தேர்வான இவர், அம்மாநிலத்தில் உள்துறை இணைச் செயலாளர், லம்பேல் துணைப் பிரிவு அதிகாரி மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குநர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றினார்.

அவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி, மணிப்பூர் அரசு தற்போது அவரை காக்சிங் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமித்துள்ளது. தமிழ் வழியில் பயின்று மிக இளம் வயதிலேயே மாநிலத்தின் மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ள இவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.