அரசியல்

"விஜயின் 50 நாள் ஆட்சி தோல்வியா? ஈ.ஆர். ஈஸ்வரன் நேரடி விமர்சனம்"

By Sumalekha
08 Jul 2026, 05:00 PM
கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
தி. மு.க. கூட்டணியில் இருந்து வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விலகிய பிறகும்கூட அதே கூட்டணியில் உறுதியுடன் நீடித்துவருகிறது கொ.ம.தே. கட்சி. வெறும் பெயரளவில் கூட்டணியில் இல்லாமல் த.வெ.க. வீசும் அம்புகள், அதன் திடீர் ஆதரவு கட்சிகள் பொழியும் வசை மழையில் இருந்து தி.மு.கவை காக்கும் சுவராக நிற்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன். அவர் நமக்கு அளித்த விரிவான நேர்காணல்...

அ.தி.மு.க. ஆதரவுடன் எளிதாக ஆட்சி அமைப்பதை விட்டுவிட்டு, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை மட்டும் குறிவைத்து த.வெ.க. பிரித்து விட்டதாக நினைக்கிறீர்களா?

த.வெ.க, அரசியல் களத்திற்கு புதிதாக வந்த கட்சி என்றாலும், 'ஸ்டேட்டர்ஜி'யில் மற்ற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சிறப்பாக செயல்படுகிறது. தாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்பதை 'ப்ரொஜெக்ட்' செய்வதற்காக, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை குறிவைத்து இழுத்துள்ளது. அப்படி அணி மாறியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து ஆதரவையும்
உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது த.வெ.க.

தேர்தலுக்கு முன்பாக 'ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு தருவோம்' என சொன்னதை விஜய் நிறைவேற்றிவிட்டாரே?

பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார். ஒருவேளை மெஜாரிட்டி கிடைத்திருந்தால், இது நடந்திருக்குமா என்பது சந்தேகமே. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்கும் நடவடிக்கையைப் பார்த்தால், தேர்தலுக்கு முன்பு சொன்னதற்காக, பெருந்தன்மையோடு அமைச்சரவையில் இடம் கொடுத்தது போல் தெரியவில்லை. தி.மு.க. சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என தங்களுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதாக வைகோ குற்றம் சாட்டுகிறார்.

உங்களுக்கும் நிர்பந்தம் கொடுக்கப்பட்டதா?

எந்த தொகுதிகளில், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதெல்லாம் தேர்தலுக்கு முன்பு பரஸ்பரம் ஒப்புக்கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள். தேர்தல் முடிந்தபின் அதுகுறித்துப் பேசுவது சரியான நிலைப்பாடு இல்லை. தி.மு.க. சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லையென்றால், கூட்டணியில் இருந்தோ, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தோ வைகோ விலகி இருக்கலாமே. கமல்ஹாசன் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லையா? 'இப்போது, எங்களது கட்சி நிர்வாகிகள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்கள்' என்று மட்டும் சொல்லிவிட்டு வைகோ போயிருக்க வேண்டும். அதை விடுத்து தி.மு.க. மீது குற்றம் சாட்டுவது அநாகரீகம்.

'தி.மு.க. கூட்டணியே இல்லை' என்று இடதுசாரிகள் கூறியதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றி இருக்கிறீர்களே?

த.வெ.க. அரசுக்கு ஆதரவு என்ற நிலை எடுத்த பின், இடதுசாரிகளும், திருமாவளவனும் மாற்றி மாற்றி பேசி வருகின்றனர். 'தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இல்லை' என்று அவர்கள் சொல்லலாம். ஆனால், கொ.ம.தே.க, தே.மு.தி.க. உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் தொடரும்போது, 'தி.மு.க. கூட்டணியே இல்லை' என்று அவர்கள் எப்படி சொல்ல முடியும்?

'எடப்பாடியை முதல்வராக்க தி.மு.க. திட்டம் தீட்டியதால்தான், கூட்டணியில் இருந்து வெளியேறினோம்' என தோழமைக் கட்சிகளும், பதவி விலகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சொல்கிறார்களே?

தி.மு.க. கூட்டணியில் நாங்களும் இருந்தோம். தி.மு.க. தரப்பில் இருந்து இப்படி ஒரு தகவலை எங்களிடம் யாரும் சொல்லவில்லை. மேலும், 'இப்படி ஒரு முயற்சி நடக்கவில்லை' என சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தபின்பு, அதைப்பற்றி பேசக்கூடாது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யவைக்கலாம். 'ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து, தேர்தலைச் சந்தித்தால் நான் வந்து பிரசாரம் செய்கிறேன்' என முதல்வர் சொல்லலாம். இவையெல்லாம், ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்றால், தி.மு.க.வும், அ.தி.மு.கவும் ஏன் கூட்டணி சேரக்கூடாது? சட்டப்படி இது ஒன்றும் குற்றம் இல்லையே. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக இணைந்து செயல்பட முடிவெடுத்தால் அது எப்படி தவறாகும்?

குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக, தி.மு.க. த.வெ.க. ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி குற்றம் சாட்டுகின்றனவே?

2006ல் தி.மு.க.விற்கு குறைவான எம்.எல்.ஏக்கள் இருந்தும்கூட இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் முழுமையாக ஐந்தாண்டு ஆட்சி நடந்தது. தற்போது கூட்டணிக் கட்சிகள் துணையோடு போதுமான ஆதரவில் ஆட்சி நடக்கும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை த.வெ.க. ஏன் ஊக்குவிக்கிறது? கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என்றால், ஆட்சியை கலைத்துவிட்டு, த.வெ.க. மீண்டும் தேர்தலைச் சந்திக்கலாமே.

'விரைவில் தேர்தல் வர வாய்ப்புள்ளது. அதற்கு தயாராக இருக்க வேண்டும்' என ஸ்டாலின் பேசியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதே?

கட்சிப் பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்த ஸ்டாலின் அப்படி பேசியிருப்பார். அதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்களைப் பொறுத்தவரை, ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

த.வெ.க. எம்.எல்.ஏ.வை வளைக்க தி.மு.க. தரப்பில் ரூ. 35 கோடி வரை பேரம் நடந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
எம்.எல்.ஏ.க்களை யார் விலை பேசினாலும், அது குற்றம்தான். ஆனால், தற்போதைய குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையாக விசாரணை முடிய வேண்டும். அதன்பிறகுதான் உண்மை தெரியவரும்.

த.வெ.க.வின் 50 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது?

அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுப்பதால், த.வெ.க.விற்கு மக்கள் மத்தியில் கெட்டபெயர் ஏற்பட்டுவருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாததால், விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதையெல்லாம் உணராமல், எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு போராட்டம் நடப்பதாக, முதல்வர் சட்டமன்றத்தில் பேசுகிறார். இதை அவருக்கு யார் எழுதிக் கொடுத்தது என்றுதான் தெரியவில்லை.