விளையாட்டு

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்: இந்திய அணிக்கு பின்னடைவு!

By Sumalekha
04 Jun 2026, 01:33 PM
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜூன் 13 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி (RCB) அணி 156 ரன்கள் இலக்கை விரட்டித் தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க விராட் கோலி முக்கியப் பங்காற்றினார்.

அந்தப் போட்டியில் 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டியின் இறுதிப் பகுதியில் ரன் ஓடக் கடினப்பட்ட கோலிக்கு, பரிசோதனையில் தசைநார் கிழிவு (Tendon tear) ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறப்பான பார்மில் இருந்த கோலி

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடும் நோக்கில் தீவிரமாக இருந்த கோலிக்கு, இந்த காயம் தவறான நேரத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 13 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 651 ரன்கள் குவித்து இந்தியாவின் அதிக ரன் குவித்த வீரராகத் திகழ்ந்தார். அதே ஃபார்மை 2026-இலும் தொடர்ந்த அவர், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளில் 240 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, வரும் ஜூலை 14 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோலிக்கு மாற்றாக விளையாடவுள்ள வீரர் குறித்து பிசிசிஐ (BCCI) இன்னும் அறிவிக்கவில்லை.

இந்திய அணி விவரம்

ஆப்கானிஸ்தான் தொடருக்கான பலமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் உடற்தகுதி சான்றிதழின் அடிப்படையிலேயே அவர்கள் விளையாடுவது உறுதி செய்யப்படும்.

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே.