மேற்காசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, சென்னையில் இன்று (ஜூலை 1) வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது வணிகர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வணிக சிலிண்டர் விநியோகத்திற்குப் பெட்ரோலிய அமைச்சகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதனால் சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு, பதற்றம் தணிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வணிக சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகளைப் பெட்ரோலிய அமைச்சகம் சமீபத்தில் முழுமையாக நீக்கியது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சிக்கு பின், சென்னையில் ஒரு வணிக சிலிண்டர் ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது வழக்கம் போல ஒரு சிலிண்டர் ரூ.928.50 என்ற பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையும் குறைய வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் இடையே ஏற்பட்டுள்ளது.