தமிழ்நாடு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை... போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

By Christon
25 May 2026, 02:11 PM
விளாத்திகுளம் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்குத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று (மே 25) மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றபோது மாயமானார். பின்னர் காட்டுப் பகுதியில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தத் கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தர்ம முனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இத்தேர்தல் கால பரபரப்புக்கு மத்தியில், தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் கடந்த இரண்டு மாதங்களாக இந்த வழக்கின் விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்றது. மொத்தம் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நீதிபதி ப்ரீத்தா இன்று குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

காவல்துறையினரின் விசாரணையில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று, ஜாமீனில் வெளியே வந்திருந்தபோதுதான் இந்தத் தொலையாத கொடூரத்தைச் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே 65 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து, நகைகளைத் திருடிக் கொலை செய்த வழக்கில் இவருக்குத் தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர், நீதிமன்றத்தில் வாரந்தோறும் கையெழுத்திடுவதற்காகச் சாயல்குடியிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து சென்றுள்ளார். அப்படி வந்து சென்ற வேடநத்தம் கிராமப் பாதையில்தான், இந்த 12-ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.