அரசியல்

6 விக்கெட் காலி... 9 விக்கெட்டுகள் யாருக்கு? அதிர்ச்சியில் ஸ்டாலின், எடப்பாடி!

By Sumalekha
05 Jul 2026, 10:30 AM
தனிப்பெரும்பான்மை இலக்குடன் மேலும் 15 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
'முதல் முயற்சியிலேயே ஆட்சி!' என்று விஜய் பூரித்துப்போய் இருந்தாலும், 'தனிப்பெரும்பான்மை இல்லாத ஆட்சியை தகர்க்க எப்போது சமயம் வரும்?' என காத்துக்கிடக்கின்றன எதிர்முகாம்கள். இதையொட்டி, 'நாற்காலி ஆடாமல் இருக்க கூட்டணிகளின் கால்களை நம்ப முடியாது. சொந்தக்கால்தான் தேவை' என விஜய் தீர்மானித்து காய்களை நகர்த்திவருவதுதான் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க ஆகிய இருபெரும் கழகங்களை அதிரவைக்கும் ஹாட் டாபிக்!

இதுகுறித்து மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். 'ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தின் தலைவரான ஸ்டாலின், 'எந்நேரத்திலும் தேர்தல் வரலாம். அது மூன்று மாதங்களிலும் இருக்கலாம், ஆறு மாதங்களிலும் இருக்கலாம்.

தி.மு.க.வினர் தயாராக இருக்க வேண்டும்' என பேசியதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்தவொரு சிறு நகர்வையும் கணக்குப் போட்டு செய்யக்கூடிய திமுக, இப்படியொரு கருத்தை ஆணித்தரமாக உதிர்க்கிறது என்றால் அது சாதாரண அரசியல் பேச்சல்ல என்பதை தவெகவும் உணர்ந்திருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான், அமைச்சர் நிர்மல் குமாரும், 'தி.மு.க. - அதிமுக இணைந்து இன்னமும் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியை செய்கின்றன. குதிரைபேரம் மூலம் எப்படியாவது ஆட்சியை அமைக்க முயற்சி செய்கிறார்கள்' என தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்.

என்னதான் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்திருந் தாலும்கூட, முதல்வர் விஜய்க்கு தன் அரியாசனம் ஆடிக்கொண்டே இருப்பதாக ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான், முதற்கட்டமாக ஜூலை 1ம் தேதி, த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி, தனது தலைமையில் கூட்டணி வலுவாக இருப்பதாக வெளிக்காட்டினார் விஜய் மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், காதர் மொகிதீன், வைகோ ஆகியோரை தொடர்ந்து த.வெ.க ஆட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கவுக்கு எதிராகவும் பேசவைத்து வருகிறார் விஜய் குறிப்பாக, மிக விரைவில் தி.மு.க.வுக்கு எதிராக திருமாவை பேச வைக்க முயற்சிகள் வேகமெடுத்துள்ளன.

அதேசமயம், 'அரசியலில் எது எப்போது வேண்டுமானால் மாறலாம், ஆட்சியில் ஏதாவது தவறு நடந்துவிட்டால் இவர்களில் சிலர் அதை காரணமாக வைத்து தி.மு.க பக்கம் சாயவும் தயங்கமாட்டார்கள். நாம் விரும்பும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றாலும் இவர்களின் அனுமதியை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதனால் சீக்கிரமே சொந்தக்காலில் நின்றுவிட வேண்டும்' என விஜய் நினைக்கிறார்.

தேர்தல் முடிவு வந்தபோதே, 108 இடங்களைப் பிடித்துவிட்டோம். இன்னும் 10 அல்லது 15 தொகுதிகளில் கூடுதலாக ஜெயித்திருந்தால், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனிப்பெரும்பான்மையோடு இருந்திருக்கலாம்' என தன்னிடம் விஜய் சொன்னதாக அமைச்சர் ஆதவ் சொல்லியிருந்ததும் இதன் முன்னோட்டம்தான். இதையடுத்துதான் விஜய், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 11 இடங்களுக்கும் கூடுதலான (107 இடங்கள் தவெ.க. வசம் உள்ளன) தொகுதிகளை கைப்பற்ற தெளிவாக காய்களை நகர்த்திவருகிறார். 11 என்ற பார்டர் எண்ணிக்கை மிகவும் டேஞ்சர் என்பதால், 15 எம்.எல்.ஏ தொகுதிகளை கைப்பற்ற முடிவு செய்திருக்கிறது த.வெ.க.

அதை சுலபமாக அடைய, பலவீனமாக உள்ள அ.தி.மு.க.வை மூன்றில் இரு பங்குக்கும் மேல் உடைப்பது கைகொடுக்கும் என்றாலும்கூட, அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை த.வெ.க ஏற்கெனவே டீல் செய்த விதத்தால் அதற்கு சாத்தியமே இல்லாத சூழல் நிலவுகிறது. அதனால், தனித்தனியாக எம்.எல்.ஏக்களை கவரும் வேலையை இன்னும் மூன்று மாதங்களுக்குள் செய்திட வேண்டும் என காய்களை நகர்த்திவருகிறார் விஜய். ஏற்கெனவே, அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என ஆறு பேர் த.வெ.கவில் இணைந்துள்ளனர்.

இதுபோக, கூடுதலாக தேவைப்படும் 9 எம்.எல்.ஏக்களில் நால்வரை தி.மு.க.வில் இருந்தும், 5 பேரை அ.தி.மு.க அதிருப்தி அணியில் இருந்தும் இழுக்கும் வேலையை த.வெ.க. கிட்டத்தட்ட செய்து முடித்துவிட்டது என சொல்லப்படுகிறது. அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களிடம் பேசும் த.வெ.க. தரப்பு, அவர்களுடன் சேர்த்து அவர்களின் ஆதரவாளர்கள் சிலரையும் கையோடு அழைத்துவர பேசியிருக்கிறது.

மறுமுனையில், நான்கு திமு.க. எம்.எல்.ஏக்களை நேரடியாக கவர்வது கடினம் என்பதால், உதயசூரியன் சின்னத்தில் வென்ற ம.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருவரையும், தி.மு.க. அதிமு.க கூட்டணி முயற்சியால் அதிருப்தியில் இருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் இருவரையும் வளைக்க தவெக. முயன்றுவருகிறது. இதற்கான வேலைகளில் த.வெக தரப்பில் ஆதவ் அர்ஜுனாவும், அ.தி.மு.க தரப்பில் லீமா ரோஸும் ஈடுபட்டுவருகிறார்கள் என சொல்லப்படுகிறது. அதேசமயம், இது சர்ச்சையாகவும் வெடிக்கக்கூடாது என்பதற்காகவே ஒருவர் பின் ஒருவராக, தக்க காரணங்களுடன் ராஜினாமா செய்யவைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளன" என சொல்லி முடித்தார்.

இதுகுறித்து பேசும் முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி, 'தவெகவுக்கு தேவை இருக்கலாம். ஆனால், திமுகவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கத்துடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டதில் அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் எடப்பாடி மீது கடுமையான அதிருப்தி உள்ளது. 'ஏதோ ஒரு புள்ளியில் எடப்பாடி அ.தி.மு.கவை தி.மு.க.வில் கொண்டுபோய் சேர்த்துவிடுவார், தலைமை மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்.

இனி இவரை நம்பி பிரயோஜனம் இல்லை' என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தவெ.க. என்பதால் அங்கு செல்கிறார்கள். 15 பேர் போவதாக சொல்லப்படுவது உண்மைதான். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றார் ஒரே போடாக.
பதவி படுத்தும் பாடு!